புதுச்சேரி, ஜூன் 28: புதுச்சேரியில் மூன்று நியமன எம்எல்ஏக்கள் நேற்று பதவியை ராஜினாமா செய்து அளித்த கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள 3 நியமன எம்எல்ஏக்களான ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் கட்சி அறிவுறுத்தலின்பேரில் பதவியை ராஜினாமா செய்து, அதன் கடிதத்தை என்னிடம் கொடுத்தனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை மற்றும் கவர்னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் கட்சி பணி ஆற்ற விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜினாமா செய்துள்ள காரணம் அவரும் கட்சி பணி ஆற்ற விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் 3 நியமன எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர் நியமிக்கப்படுவார்கள்.
தேசிய தலைமை சொன்னால் நானும் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயார். வருங்காலங்களில் சட்டமன்ற தேர்தலையொட்டி நிறைய மாற்றங்கள் ஏற்படும். புதிய கட்சி தலைவர் யார் என்பது குறித்து 30ம் தேதி தேசிய பொதுச் செயலாளர் தருண் சூட் புதுவைக்கு வருகை தந்து அறிவிப்பார். மேலும் விரைவில் சிறப்பு சட்டமன்றம் கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.