ஆரணி, ஆக. 15: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் சில தினங்களாக விடிய விடிய பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. மேலும், ஆரணி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆரணி, களம்பூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொர்ணவாரி பட்டத்தில் விவசாயிகள் சாகுபடிசெய்துள்ள, நெல்பயிர்களான மகேந்திரா, ஆர்என்ஆர், ஏடிடீ 53, கோ 51, கோ 55, ரித்திகா உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிரிட்டிருந்தனர்.
தற்போது, நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில், கனமழையினால் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கியும், நெல்மணிகள் படுத்து முளைத்து அதிகப்பாடியான பயிர்சேதங்கள் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, சேவூர், அடையபலம், அக்ராப்பாளையம், ரகுநாதபுரம், அரியப்பாடி, காமக்கூர், ஆதனூர், மட்டதாரி, பனையூர், விண்ணமங்கலம், ஆகாரம், ஆதனூர், வடுக்கசாத்த, களம்பூர், கஸ்தம்பாடி, அம்மாபாளையம், குண்ணத்தூர், பையூர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிட்டிருந்த நெல்பயிர்கள் மழைநீரில் முழ்கி சேதமடைந்துள்ளது.
அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்கள் தண்ணீரில் முழ்கியதால், நெல் மணிகள் நிலத்தில் நாற்றாக முளைத்து, அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து, கடந்த 9ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. மேலும், தினகரன் செய்தி எதிரொலியாக ஆரணி, கண்ணமங்கலம், களம்பூர் பகுதியில் உள்ள அரியப்பாடி, இரும்பேடு, ராட்டிணமங்கலம், மெய்யூர், கொளத்தூர், காட்டுகாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழையால் சேதடைந்த நெல் பயிர்களை மாவட்ட வேளாண் துணை இயக்குனர்(மத்திய அரசு திட்டம்) சுந்தரம் தலைமையில் வேளாண் உதவி இயக்குநர் செல்லதுரை, துணை வேளாண் அலுவலர் சின்னசாமி,
வேளாண் அலுவலர் பவித்ராதேவி மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் நெற் பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து, வேளாண் துறை, வருவாய்துறை அதிகாரிகள் மூலம் பயிர் சேதங்களை நேரில் பார்வையிட்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வருவாய்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பயிர் சேதங்களை கணக்கீடும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில், முதற்கட்டமாக ஆரணி, களம்பூர், கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழுகி சேதமடைந்துள்ளகாவும், மீதமுள்ள, விடுபட்டவைகள், கணக்கீடு செய்து பணிகளில் வேளாண்மை அலுவலர்கள், ஆர்ஐ, விஏஓக்கள் மூலம் அந்த கிராமங்களில் தொடர்ந்து சேதம் குறித்து கூட்டுதணிக்கை செய்யும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பயிர்சேதங்கள் முழுமையாக கணக்கீடு செய்து முடித்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.