* சிறப்பு செய்தி
கடந்த 2 ஆண்டுகளில் 5019 அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில் 1124 திட்டங்கள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. மேலும் 2931 பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே, கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து ஆட்சியமைத்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் தமிழ்நாட்டில் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில், மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து திட்டம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்காக மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம் உள்ளிட்டைவை பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்ற குறிப்பிடத்தக்க திட்டங்களாக பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.4,805 கோடி மதிப்பில் நகைக் கடன் தள்ளுபடி ஆகியவை அடங்கும். வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ன.
இந்நிலையில் 3 நிதியாண்டில் கவர்னர் உரை, முதல்வரின் 110 அறிவிப்புகள், பட்ஜெட் உரை, அமைச்சர்களின் அறிவிப்புகள் மற்றும் விவசாய பட்ஜெட் என 2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையில் 5019 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1124 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற முதலமைச்சருடனான அனைத்து துறையின் செயலாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்த தடையாக உள்ள பிரச்னைகளை சுமுகமாக முடித்து பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை செயல்படுத்தவும் துறையின் அதிகாரிகளுக்கு அறிவுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2021-23ம் ஆண்டுக்கான அறிவிப்புகளை அடுத்த மாதத்திற்குள் அரசாணை வெளியிடப்பட்டு பணிகளை முடிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களில் தொடங்கக்கூடிய பணிகள் மற்றும் 6 மாதங்களுக்குள் முடிக்கக்கூடிய தற்போதைய பணிகள் ஆகியவற்றை கண்டறிந்து அதன் விவரங்களை சிறப்பு திட்ட செயலாகத்துறைடன் பகிர்ந்து செயல்படுத்துவதற்கான முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
5019 அறிவிப்புகளில் 1124 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2931 திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 44 திட்டங்கள் நிலுவையில் உள்ளது. மேலும், 920 திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. 2021ல் ஆண்டின் 2 சதவீதம், 2022ம் ஆண்டின் 4 சதவீதம் மற்றும் இந்தாண்டின் 49 சதவீதம் திட்டங்களுக்கு மட்டுமே அரசாணை பிறப்பிக்க வேண்டி உள்ளது. இது மொத்தமாக அறிவிக்கப்பட்ட திட்டத்தில் 18 சதவீதம் ஆகும். இந்த பணிகளை 6 மாதங்களுக்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருடம் 2021-22 2022-23 2023-24 மொத்தம்
மொத்த அறிவிப்புகள் 1679 1668 1672 5019
அரசாணை வெளியிட்டு செயல்படுத்திய திட்டங்கள் 760 303 61 1124
நடைபெற்று வரும் பணிகள் 888 1277 766 2931
நிலுவையில் உள்ள அரசாணைகள் 4 19 21 44
அரசாணை
பிறப்பிக்க வேண்டிய அறிவிப்புகள் 27
(2%) 69
(4%) 824
(49%) 920
(18%)