வாழப்பாடி: செல்போனில் கேம் விளையாடியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற பிளஸ் 1 மாணவர்கள் 2 பேர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள ஏத்தாப்பூர் அடுத்த புத்திரகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் தினேஷ் (16). இதே பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் ஆனந்த் (16). நண்பர்களான இருவரும், ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். விடுமுறை தினமான நேற்று காலை, இருவரும் செல்போனில் வீடியோ கேம் விளையாடியபடி, அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி பயணிகள் ரயில் எதிரே வேகமாக வந்தது. ஆனால், செல்போனில் கேம் விளையாட்டில் மும்முரமாக இருந்த இருவரும், ரயில் வருவதை கவனிக்கவில்லை. இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் இருவர் மீதும் ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன் சென்ற ஆனந்த் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி ஆனந்தும் உயிரிழந்தார். இதுபற்றி சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.