கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மகன் ஆகாஷ் (14). பூசாரிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அந்தோணி மகன் ஜான் (14). இருவரும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இருவரும் நேற்று கிருஷ்ணஜெயந்தி விடுமுறையையொட்டி அருகேயுள்ள கூசாலிப்பட்டி கிராமத்திலுள்ள கிணற்றில் குளிப்பதற்கு சைக்கிளில் சென்றனர். சைக்கிளை நிறுத்தி விட்டு சுற்றுச்சுவர் இல்லாத தரைமட்ட கிணற்றில் இறங்கி குளித்துள்ளனர். எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். பிற்பகலில் அந்த வழியாகச் சென்றவர்கள், சைக்கிள் மற்றும் உடைகள் கிடப்பதை பார்த்து கொடுத்த தகவலின்படி போலீசாரும் தீயணைப்பு படையினரும் வந்து இருவரின் சடலங்களையும் மீட்டனர்.