கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பெண் உட்பட 2 பேர் பலியாகினர். மழை காரணமாக மலையேற பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலையேற கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், காரைக்கால் பகுதியை சேர்ந்த கவுசல்யா என்ற 45 வயது பெண் வெள்ளியங்கிரி மலையேற ரயில் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து கோவை வந்தார். நேற்று முன்தினம் காலை வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற அவர், நண்பர்களுடன் மலையேறினார். ஏழு மலைகள் ஏறி சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்த பின்னர், கீழே இறங்க ஆரம்பித்தார். அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மலையிறங்க முடியாமல் தவித்த அவர், ஏழாவது மலையில் உள்ள விநாயகர் கோயில் அருகில் திடீரென மயக்கம் அடைந்தார்.
நண்பர்கள் சோதித்து பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டம் மேல்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (32) என்பவர் நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி மலையேறினார். ஐந்தாவது மலையேறியபோது, அவர் திடீரென உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார்.
ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதாலும் பக்தர்களின் நலன் கருதி மலையேற போளுவாம்பட்டி வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். கடந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையேறிய 9 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்தாண்டில் இதுவரை 15 வயது சிறுவன், ஒரு பெண் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.