உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (60). ஆடு வியாபாரி. இவரது, வீட்டின் அருகே உள்ள ஆடு தொட்டியில் இருந்த 16 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து ஆடு வியாபாரி மணி, உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று போளூர் பகுதியில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடு வியாபாரி மணியின் ஆடுகள் விற்பனை செய்வதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார், அங்கு ஆடு வியாபாரி மணியின் ஆடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆடுகளை திருடி விற்க முயன்ற மர்ம நபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஜெயகுமார் (எ) ஜெய் (23), திருப்பத்தூரை சேர்ந்த சூரியா (28) என்பதும், 2 பேரும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும், தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.