புழல்: புழல் சைக்கிள் ஷாப் அருகே பைக்கில் சென்ற இருவர் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உதயா (30), கோகுல் (35), சாரதி (35). இவர்கள் சென்னையில் தங்கி, தனியார் நிறுவனங்களில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை இவர்கள் ஒரே பைக்கில் மாதவரம் செல்வதற்காக, மதுரவாயல் – புழல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். புழல் சைக்கிள் ஷாப் அருகே பைபாஸ் சாலை மேம்பால வளைவில் சென்றபோது, நிலை தடுமாறிய பைக், மேம்பால சுவர் மீது மோதியது.
இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சாரதி, கோகுல் ஆகிய இருவரும் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உதயா லேசான காயத்துடன் தப்பினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் சாரதி, கோகுல் ஆகிய இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.