Monday, February 26, 2024
Home » தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில் 2-வது சிறந்த மாநில விருது கோவை, தூத்துக்குடி, தஞ்சாவூருக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது: அரசு தகவல்

தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில் 2-வது சிறந்த மாநில விருது கோவை, தூத்துக்குடி, தஞ்சாவூருக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது: அரசு தகவல்

by Karthik Yash

சென்னை: சீர்மிகு நகர திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசினால் வழங்கப்படும் விருதுகளில், தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில் 2-வது சிறந்த மாநிலத்திற்கான விருது, கோவை, தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கு சிறந்த மாநகரங்களுக்கான விருது வழங்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற பகுதிகளில் முக்கிய உட்கட்டமைப்பை வழங்குவது, சுத்தமான, நிலையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கங்களுடன் ஒன்றிய, மாநில அரசின் நிதியுதவியுடன் சீர்மிகு நகரத் திட்டம், ஜூன், 2015ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில், சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகள் சீர்மிகு நகரங்களாக தேர்வு செய்யப்பட்டன. சீர்மிகு நகர திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கான 2022ம் ஆண்டிற்கான இந்திய சீர்மிகு நகர விருது போட்டியில் இந்திய அளவில், தமிழ்நாடு இரண்டாவது சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் அனைத்து சீர்மிகு நகரங்களுக்கு இடையேயான போட்டியில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தென் மண்டல அளவிலான நிதி மற்றும் செயல்திறனில் முதல் இடத்திற்கான விருது மற்றும் மாதிரி சாலைகள், ஏரிகள் புனரமைப்பிற்காக இந்திய அளவில் முதல் இடத்திற்கான விருது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மறு சீரமைப்பு மற்றும் நகரத்தின் அடையாளத்தை மேம்படுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு இந்திய அளவில் 3-வது இடத்திற்கான விருது, மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் 3-வது இடத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் இரண்டாவது சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான விருதினை கடந்த 27ம் தேதி மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பெற்றுக்கொண்டார். மேலும், சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதுகளை மாநகராட்சியின் மேயர்கள் மற்றும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi