மெக்கே: இந்தியா ஏ மகளிர் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா ஏ மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று நடந்தது.
கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் நடந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. ஏ முதலில் பந்துவீச இந்தியா ஏ அணி 48 ஓவரில் 218 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ராகவி பிஸ்ட் 70, தேஜல் ஹசப்னிஸ் 63, ஷுபா சதீஷ் 24, ஷிப்ரா கிரி 17, ஷ்வேதா 11 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். ஆஸ்திரேலியா ஏ பந்துவீச்சில் பிரவுன், ஹான்காக், சார்லி தலா 2, டெய்லா, கிரேஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய ஆஸி. ஏ அணிக்கு தொடக்க வீராங்கனைகள் கேத்தி மேக் – மேடி டார்க் இணைந்து 22.3 ஓவரில் 131 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கேத்தி மேக் 68, சார்லி நாட் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலியா ஏ 40.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
மேடி டார்க் 106 ரன் (115 பந்து, 7 பவுண்டரி, கேப்டன் தஹ்லியா மெக்ராத் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாயாலி, தனுஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா ஏ 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி நாளை காலை 8.50க்கு தொடங்குகிறது.