Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காதலிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளான நிலையில் தேடி போன காதலனுக்கு தர்மஅடி கொடுத்து 2வது திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்: போலீஸ் தலையீட்டையும் புறக்கணித்ததால் பரபரப்பு

பாட்னா: காதலிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளான நிலையில் அவரை சந்திக்க வந்த காதலனுக்கு தர்மஅடி கொடுத்து பின்னர் அந்தப் பெண்ணுக்கு கிராம மக்கள் 2வது திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் பரியார்பூர் அடுத்த லட்சுமிபூரைச் சேர்ந்த மாயங்க் என்ற இளைஞனும், ஃபேன்ஸி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் அந்தப் பெண்ணுக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இருந்தும் தனது காதலியை சந்திப்பதற்காக அவ்வப்போது ரகசியமாக காதலன் மாயங்க் சென்று வருவதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது காதலியின் வீட்டிற்கு காதலன் சென்றார்.

அப்போது இருவரும் வீட்டின் பின்னால் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், காதலியின் தந்தை சச்சீந்திர சிங் இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும் களவுமாகப் பிடித்தார். குடும்ப உறுப்பினர்களும் அங்கு கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது. காதலனை பிடித்து குடும்பத்தினர் சரமாரியாக தாக்கினர். தர்மஅடி வாங்கிய காதலன் கூச்சலிட ஆரம்பித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். காதலியின் குடும்பத்தினரும், கிராம மக்களும் இந்த விஷயத்தை தங்களுக்குள் தீர்த்துக் கொள்வதாக கூறி போலீசாரை திருப்பி அனுப்பினர்.

கடைசியாக காதல் ஜோடியான இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்பின் கிராம மக்களும் குடும்பத்தினரும் இணைந்து மாயங்க்கும், ஃபேன்சிக்கும் தங்களது பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி அன்றிரவே திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஃபேன்சிக்கு மஹுவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, அந்தப் பையனின் மனநிலை சரியில்லை என்பதை அந்தப் பெண் அறிந்தார். அதனால் திருமணமான ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார்.

அவர்களுக்குள் இன்னும் விவாகரத்து கூட நடக்கவில்லை. இருந்தாலும் அந்தப் பெண், தனது காதலனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னர் ஃபேன்ஸியை மாயங்குடன் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருவரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ள நிலையில், காவல்துறைக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்பதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறினர்.