சென்னை: இரண்டாவது திருமணம் செய்த விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுரேஷ், திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறி கடை வைத்துள்ளார்.
இந்தநிலையில் திருவள்ளூர் கம்பர் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீடான புல்லரம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். இவர், சுரேஷின் காய்கறி கடைக்கு அவ்வப்போது வந்தபோது, அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி புட்லூர் அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சுரேஷின் முதல் மனைவி பார்வதி, தனது கணவரின் கடைக்கு வரக்கூடாது என ராஜேஸ்வரியை எச்சரித்து, அவரது வீட்டிற்கு அனுப்பி விட்டதாக தெரிகிறது.
ஆனால், அவர் சுரேஷின் காய்கறி கடைக்கு வந்து, வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பார்வதி, கடந்த 9ம் தேதி காலை, தனது உறவினர்களுடன், கணவரின் காய்கறிக் கடைக்கு வந்து, அங்கிருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றினார். அப்போது பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீப்பற்றியது. தீ மளமளவென பற்றியதையடுத்து ராஜேஸ்வரி கதறினார். அவர் தீயில் எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் சுரேஷின் மனைவி பார்வதி மற்றும் அவரது உறவினர்கள், காய்கறி கடைக்குள் வேகமாக வருவதும், பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றுவதும், பின்னர் ராஜேஸ்வரிக்கு பின்னால் சுவரில் சுரேஷின் தந்தை படத்தின் முன்பு ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கிலிருந்து தீப்பற்றி ராஜேஸ்வரி உடல் முழுவதும் எரியும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதில் உடல் முழுவதும் 80 சதவீத தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார். இது தொடர்பாக சுரேஷ், அவரது முதல் மனைவி பார்வதி (36), உறவினர்கள் விஜயா (55), மோகன் (28), முரளி (34), நதியா (33), லட்சுமி (32), சங்கர் (40) ஆகிய 8 பேர் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.