‘‘நானும் என் அண்ணியும் சேர்ந்துதான் இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை ஆரம்பிச்சோம். விளையாட்டாக துவங்கியது, அதுவே இப்போது எங்களின் ஒரு அடையாளமாக மாறி வருகிறது’’ என்கிறார் வர்ஷினி. இவர், தன் அண்ணி அனுபமா வுடன் இணைந்து ‘கான்ஃபெட்டி பிளானர்ஸ்’ என்ற பெயரில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
‘‘நாங்க இருவருமே வெளிநாட்டில் தான் எங்களின் முதுகலை படிப்பை முடிச்சோம். நான் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சேன். அவங்க பொறியியல் துறையை தேர்வு செய்திருந்தாங்க. படிப்பு முடிச்சதும், வேலையும் பார்த்து வந்தோம். இதற்கிடையில் திருமணம், குழந்தைகள் என்பதால், எங்க இருவராலும் தொடர்ந்து வேலையில் ஈடுபட முடியவில்லை. காரணம், எங்க இருவருக்குமே இரண்டு சின்னச் சின்ன குழந்தைகள் இருந்தனர். அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாங்க வேலையில் இருந்து விலகிட்டோம்.
இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே இருந்தது. அதனால் ஃபிரிலான்ஸ் முறையில் இ-பத்திரிகை, பில் போர்ட், போஸ்டர் போன்றவற்றை வடிவமைத்து கொடுத்து வந்தோம். எனக்கு நிர்வாகத்தின் மேல் ஈடுபாடு இருந்தது. அனுபமா கிரியேடிவ் பக்கம் திறமையானவர். அதனால்தான் எங்க இருவராலும் இதனை செய்ய முடிந்தது’’ என்றவர் ‘கான்ஃபெட்டி பிளானர்ஸ்’ ஆரம்பித்தது பற்றி விவரித்தார்.
‘‘நாங்க இப்படி ஒரு நிறுவனம் துவங்குவோம் என்றெல்லாம் நினைக்கவில்லை. எந்த ஒரு வேலையும் இல்லாமல் எங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் எங்க திறமையை சார்ந்த வேலை செய்து வருகிறோம் என்ற திருப்தி இருந்தது. நாங்க இந்த நிறுவனம் ஆரம்பிக்க எங்க குழந்தைகள்தான் முக்கிய காரணம். அவர்களின் பிறந்தநாளை நாங்க எப்போதும் அவர்களின் நண்பர்களை அழைத்து சிறிய அளவில் கொண்டாடுவது வழக்கம்.
அந்த பார்ட்டிக்கு வந்த என் குழந்தையின் நண்பர்களின் பெற்றோர், அவர்களின் குழந்தைகளுக்கும் அதே போல் பிறந்த நாள் விழாவினை அமைத்து தரச்சொல்லி கேட்டார்கள். ஒருவருக்கு செய்ய ஆரம்பித்து, அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என வரிசையாக செய்ய ஆரம்பித்தோம். இப்போது பர்த்டே பார்ட்டி மட்டுமில்லாமல், திருமணம் மற்றும் எல்லா நிகழ்ச்சிகளும் செய்து வருகிறோம்.
எங்க இருவருக்குமே இந்த துறையில் எந்த அனுபவமும் கிடையாது. அனுபமா நல்லா வரைவாங்க. டிசைனிங் செய்வாங்க. இந்த துறைக்கு வந்த பிறகு படிப்படியா ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டோம். பிறந்த நாள் விழா என்றால் அரங்கம் டிசைன் செய்வது முதல் கேக் ஆர்டர் கொடுப்பது, குழந்தை மற்றும் பெற்றோருக்கு உடைகள் டிசைன் செய்வது என அனைத்தும் பார்த்துக் கொள்கிறோம். முதலில் நாங்க இருவர் மட்டுமே அனைத்து வேலையும் செய்து வந்தோம். இப்போது எங்களுக்கு என தனிப்பட்ட குழு அமைத்திருப்பதால், அவர்கள் அனைத்து வேலையும் பார்த்துக் கொள்கிறார்கள்’’ என்றவர் கோவிட் காலத்தில் தங்களின் நிறுவனத்தை துவங்கினாலும், அதிலும் சக்சஸ் பார்த்துள்ளனர்.
‘‘2020ல் நாங்க பிசினஸ் ஆரம்பிச்ச கொஞ்ச நாட்களிலேயே லாக்டவுன் வந்துடுச்சு. அந்த சமயத்தில் எல்லோரும் வீட்டில் இருந்தபடியே பார்ட்டி செய்தாங்க. அதற்கான பொருட்களை எப்படி அமைக்கலாம்ன்னு நாங்க ஐடியா கொடுப்போம், மேலும் பார்ட்டிக்கு தேவையான பொருட்களை அவர்களின் வீட்டிற்கு டெலிவரி செய்து வந்தோம். எங்களின் பிசினஸ் அந்த சமயத்திலும் நல்லபடியாக நடந்தது. ஆனால் நாங்க பெரிய சிக்கலை சந்தித்தது… நிகழ்ச்சியின் போது சொன்ன நேரத்தில் நாங்க கேட்ட பொருட்கள் டெலிவரி செய்ய மாட்டார்கள்.
அந்த சமயத்தில் வேறு ஏதாவது பிளான் செய்து சிக்கலை தீர்ப்போம். இப்போது நாங்க இந்த துறையை சார்ந்து நிறைய விஷயங்களை அனுபவ ரீதியாக கற்றுக் கொண்டுள்ளோம். அதனால் இனி எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதாக எங்களால் சமாளிக்க முடியும்’’ என்றவர் அடுத்த வாரம் சென்னையில் நடக்க இருக்கும் கான்ஃபெட்டி பாப்பப் குறித்து பேசினார்.
‘‘இது ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சி. சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹயாத் ஓட்டலில் இம்மாதம் 20ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் இந்தியா முழுக்க உள்ள பலதரப்பட்ட டிசைனர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியினை எங்களுக்கு மிகவும் திறமையாக அமைத்துக் கொடுத்தவர் ஹர்ஷினி. அவர் மூலமாக பல டிசைனர்கள் இதில் ஸ்டால் அமைக்க இருக்கின்றனர். எனக்கும் அனுவிற்கும் ஷாப்பிங் செய்ய பிடிக்கும்.
நாங்க சென்னையை சுற்றி பல இடங்களில் ஷாப்பிங் செய்திருக்கிறோம். அவர்கள் அனைவரையும் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதால், அவரகளும் இதில் பங்கு பெறுகிறார்கள். 40க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் ஆண், பெண் மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உடைகள், அணிகலன்கள், கைப்பைகள், காலணிகள் என பல வகையினை குறைந்த விலையில் அமைத்திருக்கிறோம். விழாக்களுக்கு மட்டுமல்ல, அன்றாடம் அணியக்கூடிய உடைகளும் இதில் அடங்கும். இது எங்களின் முதல் பாப்பப் நிகழ்ச்சி. மேலும் இதனை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்ய இருக்கிறோம். இந்தியா முழுக்க மட்டுமில்லாமல் தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரத்திலும் இதனை அமைக்க
திட்டமிட்டிருக்கிறோம்.
இரண்டு இளம் அம்மாக்கள் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பதன் விதை தான் எங்க நிறுவனம். குடும்பத்ைத பார்த்துக் கொண்டாலும், சொந்தமாக சக்சஸ்ஃபுல்லாக தொழில் செய்ய முடியும் என்பதற்கு நாங்களே ஒரு உதாரணம். பெண்கள் சாதனைப் படைக்கிறார்கள். அதே சமயம் சில காரணங்களால் முடங்கிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் அவர்களுக்கு என ஒரு தனிப்பட்ட தொழிலினை அமைத்துக் கொள்ள வேண்டும். எங்களின் எதிர்கால திட்டம் மேலும் நிறைய பிராஜக்ட்களை செய்ய வேண்டும், அதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றார் வர்ஷினி.
தொகுப்பு: நிஷா