திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 கி.மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில், 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் சுவாமி தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதேபோல் சனிக்கிழமையான நேற்று முன்தினம் 70,686 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 34,563 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.02 கோடி காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆக்டோபஸ் கமாண்டோ கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.