உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நேற்று மேகவெடிப்பால் பெய்த கனமழையில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 9 பேரை காணவில்லை. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மேகவெடிப்பால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று காலை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஹோட்டல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். யமுனா நதிக்கரையில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த இருவரும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாயமான 9 பேரை தேடும் பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உத்தரகாண்டின் ருத்ரபிரயாக், டேராடூன், ஹரித்துவார், தெஹ்ரி, பவுரி மற்றும் நைனிடால் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.