நாராயண்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் பணியின்போது 2 பெண் நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் அபுஜ்மாத் பகுதியில் உள்ள கோகமேட்டா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட காடுகளில் நக்சல் இயக்கத்தின் மாட் பிரிவை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த பகுதியில் நாராயண்பூர் மற்றும் கோண்டகான் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் மற்றும் நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பெண் நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ரைபிள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.