கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லையில் பட்டியலின மாணவர் மீது வன்கொடுமை தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. தொழில்துறையினருக்கு ஆதரவாக பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு அனுப்பும் கோப்புகளில் கண்ணை மூடி கொண்டு கையெழுத்து போடுவது கவர்னரின் ேவலை இல்லை.கவர்னர் அலுவலத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அதில் கைதான நபரின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் விமான நிலையம் அருகே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மனு அளித்தனர். மனுவில், ‘‘தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்டதோடு, ஒரு படகுக்கு 2 கோடி 27 லட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் ஊர் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய இணை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்திருந்தனர்.