பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை அருகே தாத்தூர் கிராமம், கோயில் காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகன்யா (30), மகள் தனுஸ்ரீ(7), மகன் அகிலன் (4). அருண்குமார், அங்குள்ள தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சுகன்யா தோட்டத்து பகுதியிலிருந்து டவுண் பகுதிக்கு சென்று வசிக்கலாம் என அருண்குமாரிடம் தெரிவித்ததாகவும், இதற்கு அருண்குமார் மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால், அருண்குமாருக்கும், சுகன்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலில் இருந்த சுகன்யா நேற்று காலை 10 மணியளவில் தனுஸ்ரீ, அகலன் ஆகியோரை அழைத்துக் கொண்டு அருகே உள்ள மற்றொரு தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் தனுஸ்ரீ, அகிலன் ஆகிய 2 பேரையும் தள்ளி கொலை செய்து, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.