வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அமெரிக்காவின் உயரிய அறிவியல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகளான அஷோக் காட்கில் மற்றும் சுப்ரா சுரேஷ் ஆகிய இருவருக்கும் அமெரிக்காவின் உயரிய அறிவியல் விருதான தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விருதை அவர்களுக்கு வழங்கினார். இதில் அஷோக் காட்கில் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
வளரும் நாடுகளில் பயன்படுத்தப்படும் சுத்தமான நீர், அதன் ஆற்றல் திறன் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான மலிவான மற்றும் பயனுள்ள தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக பெர்க்லி தேசிய ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானியுடன் அஷோக் மேற்கொண்ட ஆய்வு பணிக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. மும்பையில் பிறந்த காட்கில் மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்றவர் என்பதும், ஐஐடி கான்பூரில் முதுகலை பட்டம் பெற்றுள்ளதோடு பெர்க்லியில் உள்ள கலிபோனியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பிறந்த உயிரியல் இன்ஜினியரான சுப்ரா சுரேஷ் கேம்பிரிட்ஜ் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் முன்னாள் டீனாக பதவி வகித்தவர். அவரது பொறியியல், இயற்பியல் அறிவியல், வாழ்க்கை அறிவியல் மற்றும் மருத்துவம் குறித்தான ஆராய்ச்சிக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.