கோவை: கடந்த 2 மாதத்தில் வேறு தகவல் தொடர்பு நிறுவனங்களிலிருந்து பிஎஸ்என்எல் சேவைக்கு 2 லட்சம் பேர் மாறியுள்ளனர். இன்னும் 2 மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பிஎஸ்என்எல் பொது மேலாளர்கள் தெரிவித்தனர். கோவை நேரு விளையாட்டு அரங்கில் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான 20வது அகில இந்திய விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது. இதன் இறுதிப்போட்டியில் பங்கேற்க வந்த தமிழ்நாடு வட்ட பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பனாவத் வெங்கடேஷ்வரலு மற்றும் கோவை மாவட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் சங்கர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 6,400 இடங்களில் பிஎஸ்என்எல் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், சேவை கிடைக்காத குக்கிராமங்களில் சேவை கிடைக்கும் வகையில், ஒன்றிய அரசின் அந்தியோதயா திட்டத்தின் கீழ் 24,680 குக்கிராமங்களில் சேவை வழங்கப்பட உள்ளது.
இதில், தமிழ்நாட்டில் 247 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 4-ஜி சேவை வழங்கப்படும். இதுவரை 79 சைட்கள் ஆய்வு செய்து நூறு கிராமங்களுக்கு சேவையானது அளிக்கப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை, ஆனைகட்டி பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களுக்கு நேரடியாக 4ஜி சேவை வழங்கியுள்ளோம். கோவையில் மட்டும் மொத்தம் எட்டு பகுதிகளில் 4ஜி சேவை வழங்கப்பட உள்ளது. கடந்த 2 மாதத்திற்குள் 4.5 லட்சம் பயனர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்துள்ளனர். 2 லட்சம் பயனர்கள் வேறு தகவல் தொடர்பு நிறுவனங்களிலிருந்து பிஎஸ்என்எல்க்கு மாறியுள்ளனர். பிஎஸ்என்எல் தேவை தற்போது அதிகரித்துள்ளது. பிஎஸ்என்எல் பைபர் டூ ஹோம் இணைப்பை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இதுவரை 5 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் 45 ஆயிரம் இணைப்புகள் இயக்கத்தில் உள்ளது.
பிஎஸ்என்எல் பைபர் டூ ஹோம் இணைப்புகளை அடுத்த ஓராண்டுக்குள் இரட்டிப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 30,296 அரசு பள்ளிகளுக்கு பிஎஸ்என்எல் பைபர் டூ ஹோம் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 21,659 பள்ளிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாத காலத்தில், எங்களது பார்ட்னர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவும் வகையில் 24/7 இயங்கும் வகையில் திருச்சியில் மிகப்பெரிய சப்போர்ட் சென்டர் அமைக்கப்படவுள்ளது. பிஎஸ்என்எல் மொபைல் டாரிப் தொகையை உயர்த்தப்போவதில்லை. பயனர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்அப் சேட் பாட் பயன்பாட்டில் உள்ளது. ஒருவர் 9 பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வரை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இன்னும் 2 மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4-ஜி சேவை அமல்படுத்த உள்ளோம். இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவை கொண்டு வரப்படும். தற்போது, 10 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளுக்கான அனைத்து உபகரணங்களும் டிசிஎஸ் உள்ளிட்ட இந்திய தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.