சாப்ரா: பீகார் மாநிலம் சாப்ரா நகரில், முன்னாள் மேயர் வேட்பாளரும், தொழிலதிபருமான அமரேந்திர சிங் மற்றும் அவரது நண்பரான மற்றொரு தொழிலதிபர் சம்புநாத் சிங் ஆகியோர், பைக்கில் உமா நகர் பகுதியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்றிரவு தொழிலதிபர்கள் இருவரும் ஒரே பைக்கில் பயணித்தபோது, துப்பாக்கி ஏந்திய சிலர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதனலால் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. சம்பவ இடத்தில் இருந்து பைக் மற்றும் மொபைல் போன்களை மீட்டு, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்று கூறினர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் சாப்ரா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமரேந்திர சிங், உள்ளூர் அரசியல் மற்றும் வணிகத்தில் முக்கியமான நபராக அறியப்பட்டவர் ஆவார். இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் தனிப்பட்ட முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. சாப்ரா பகுதியில் பதற்றமான சூழல் இருப்பதால், காவல்துறை அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.