திருமலை: ஆந்திராவில் கடந்த ஆட்சியின்போது, ரூ.1000 கோடி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். விரைவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் கைது செய்யப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியில் இருந்தபோது புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்பட்டு அரசே நேரடியாக மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்தது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்டதில் பல்வேறு போலி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து அக்கட்சியை சேர்ந்தவர்களின் பினாமி நிறுவனத்தில் இருந்து மதுபானங்கள் வாங்கி விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் அரசு நடத்தி வந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூடியது.
பழையபடி இருந்ததுபோன்று மதுபான கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெகன்மோன் ஆட்சியில் முதல்வர் அலுவலக செயலாளர் தனுஞ்சய் ரெட்டி, முதல்வர் தனி அலுவலர் கிருஷ்ணமோகன்ரெட்டி மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் பாரதி சிமெண்ட்ஸ் முழுநேர இயக்குனர் கோவிந்தப்பா பாலாஜி ஆகியோர் இணைந்து ரூ.1000 கோடிக்கு மதுபான ஊழல் நடத்தியதாக சிறப்பு விசாரணை குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் 33வது குற்றவாளியாக கருதப்படும் கோவிந்தப்பா பாலாஜியை கர்நாடகாவில் கடந்த 13ம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மே 16ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையில் ஆஜராகவேண்டும் எனக்கூறப்பட்டது.
இந்த இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீது ஆந்திர உயர்நீதிமன்றம் அனைத்து ஆதாரங்களும் மனுதாரர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி விசாரணை முக்கியமான கட்டத்தில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தனுஞ்சய் ரெட்டி மற்றும் கிருஷ்ணமோகன் ரெட்டி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து நீதிபதி பார்த்திவாலா அமர்வு விசாரணை நடத்தியது. முன்ஜாமீன் வழங்குவது விசாரணை அதிகாரியின் கைகளை கட்டிப்போடும், தற்போதைய சூழ்நிலையில் ஜாமின் கொடுக்க முடியாது. வழக்கமான ஜாமின் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டால், உயர் நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றங்களும் விதிகள் மற்றும் தகுதிகளின்படி முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழலில், விஜயவாடாவில் உள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் தனுஞ்சய் ரெட்டி மற்றும் கிருஷ்ணமோகன் ரெட்டியிடம் கடந்த 3 நாட்களில் 9 மணி நேரம் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தனுஞ்சய் ரெட்டி, கிருஷ்ணமோகன் ரெட்டியை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பதவியில் இருந்த எம்.பி., அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனையும் சிக்கவைத்து கைது செய்யப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.