நியூயார்க்: அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களையும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்களையும் திருடுவதற்காக சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதற்காக, தங்களது அரசு உளவாளிகளைப் பயன்படுத்தி, அமெரிக்காவிலேயே வசிக்கும் நபர்களைத் தங்களுக்கு ஆதரவாகத் திரட்டி, அவர்களைத் தங்களது தகவலாளிகளாக மாற்றும் வேலையில் சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், 2021ம் ஆண்டு, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசித்துவந்த யுவான்ஸ் சென் என்பவரை, லிரென் லாய் என்ற சீன உளவாளி தங்கள் உளவு அமைப்புக்கு ஆள்சேர்த்துள்ளார். இந்த பின்னணியில், சீன உளவாளிகளின் செயல்பாடுகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு தீவிரமாகக் கண்காணித்து வந்தது.
இந்தச் சதித்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ள நிலையில், யுவான்ஸ் சென் (38) மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்த லிரென் லாய் (39) ஆகிய இரண்டு சீனர்களையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிரடியாகக் கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் சீன அரசின் உளவாளிகளாகச் செயல்பட்டதாகவும், அமெரிக்க கடற்படை வீரர்களைத் தங்களுக்குத் தகவலாளிகளாகப் பயன்படுத்தவும், தேசிய பாதுகாப்புத் தகவல்களுக்காகப் பணம் கொடுக்கவும் முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கடுமையாகக் கூறியுள்ளார். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.