மதுரை துணை நடிகர் வெங்கடேஷின் காலை உடைத்த வழக்கில் பாஜ நிர்வாகி உட்பட மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். மதுரை, தபால் தந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(50). சினிமா, சின்னத்திரை நடிகர். தற்போது மதுரையில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பானுமதி. கருத்து வேறுபாட்டால் வெங்கடேஷ், மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கார் டிரைவர் மோகனிடம் பானுமதி, கணவரின் காலை உடைக்கும்படி கூறியுள்ளார்.
இதற்காக அவர் அறிமுகம் செய்த ராஜ்குமார் ரூ.1 லட்சம் கேட்கவே திட்டத்தை கைவிட்ட பானுமதி, பாஜ பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினரான தனது உறவினர் வைரமுத்துவிடம் உதவி கேட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் பாஜ பற்றி நடிகர் வெங்கடேஷ் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டதால் கோபத்தில் இருந்த வைரமுத்து, 28வது வார்டு பாஜ மண்டல தலைவர் மலைசாமி, பாஜ கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு வெங்கடேஷின் இரு கால்களையும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர்.
படுகாயம் அடைந்த வெங்கடேஷ், பீபீகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து, வெங்கடேஷின் மனைவி பானுமதி(48), ராஜ்குமார் (37), மோகன் (40), வைரமுத்து (38), மலைச்சாமி (35), ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் தமிழ்ச்சங்கு, அவரது நண்பர் துளசிராமன்(20) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.