நாமக்கல், ஆக.5: நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில 29 மாணவ, மாணவிகளும், மாநில தகைசால் பள்ளியில் பயில 13 மாணவ, மாணவிகளும், தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பயில 4 மாணவ, மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடான வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்து பேசினார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ படிப்பில் சேர தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கியும் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பேசியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம், கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்கிற வகையில் தகைசால் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில 29 மாணவ, மாணவிகளும், மாநில தகைசால் பள்ளியில் பயில 13 மாணவ, மாணவிகளும், தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பயில் 4 மாணவ, மாணவிகளும் தேர்வாகி உள்ளனர். இந்த மாணவ, மாணவிகளுக்கும், அதற்கு காரணமாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவம் புனிதமான தொழிலாகும். மருத்துவ கல்வியை மாணவ, மாணவிகள் நல்லமுறையில் படித்து, நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர் சிவக்குமார், டிஆர்ஓ சுமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன், அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.