ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல்வேறு காவல்நிலையப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வழக்குகள் தொடர்பாக மொத்தம் 28 ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட பல்வேறு காவல்நிலையப் பகுதிகளில் கடந்த ஜூலை 3ம் தேதி முதல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் உத்தரவின்படி ரவுடிகள் வேட்டைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வேட்டையில், கொடூர குற்றவழக்கு, கொலை, கஞ்சா, பிடியாணை இருந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாத ரவுடிகள், பழைய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ரவுடிகளை பொறுத்தவரை குற்ற சதவீதத்தை பொறுத்து, ஏ+, ஏ, பி மற்றும் சி வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அதன்படி, ஆவடி மாவட்டத்தில் 522 ரவுடிகளும், செங்குன்றம் மாவட்டத்தில் 593 ரவுடிகள் என மொத்தம் 1115 ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். இவர்களை ஆணையரின் உத்தரவின்படி தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து, இதுவரை 539 பேரை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரவுடிகள் வேட்டை நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட இடங்களில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் உத்தரவின்பேரில், இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் துணை ஆணையர் பாஸ்கர் தலைமையில் தனிப்படை போலீசார் மீண்டும் ரவுடிகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் கொலை வழக்கில் 7 பேர், கொலைமுயற்சி வழக்கில் 5 பேர், போதைபொருள் வழக்கில் ஒருவர், வழிப்பறி வழக்கில் 4 பேர், பழைய குற்றவாளிகள் 7 பேர் மற்றும் பிடியாணை இருந்தும் போலீசாருக்கு தண்ணி காட்டிய திருவேற்காடு, சென்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் உள்பட 25 ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதேபோல், அம்பத்தூர் காவல்நிலைய கொலை வழக்கில் நரேஷ்பாபு, செங்குன்றம் காவல்நிலைய கொலை வழக்கில் ரிஷி, அன்வர் ஆகிய 3 பேர் என மொத்தம் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடிகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தும் வரை, இந்த தனிப்படையினரின் வேட்டை தொடரும் என காவல் ஆணையர் சங்கர் எச்சரித்துள்ளார்.