புதுடெல்லி: டெல்லி உட்பட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் ஒரே நாளில் 28 பேர் பலியான நிலையில், ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி ரோகினியின் செக்டார்-20ல் உள்ள பூங்கா வெள்ளத்தில் மூழ்கியதால், குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்தது. பஞ்சாப் மாநிலத்தில் திருமண ஊர்வலம் சென்ற கார் பள்ளத்தாக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் பங்கங்கா ஆற்றில் மூழ்கி 7 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஜெய்ப்பூரில் கனோடா அணையில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். இமாச்சல் பிரதேசத்தில் குடிசைப்பகுதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால், இரண்டு குழந்தைகள் இறந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்நிலையில், டெல்லி உட்பட நாட்டின் 13 மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், அரியானா, சண்டிகர், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.