திருமலை: கூட்டுறவு பால் பண்ணைக்கு சொந்தமான 28.35 ஏக்கர் நிலம் அமுல் பால் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்படுவதாக ஆந்திர அமைச்சர் தெரிவித்தார். ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆந்திர மாநில மக்கள் தொடர்பு துறை அமைச்சர் வேணுகோபாலகிருஷ்ணா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இதில் அவர் தெரிவித்ததாவது: ஆந்திர அமைச்சரவையில் அரசு ஊழியர்களுக்கான 12வது பி.ஆர்.சி.யை உருவாக்க மாநில அமைச்சரவை ஒப்புக்கொண்டது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான மசோதாவை உருவாக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பென்ஷன் உத்தரவாதம் வழங்கும் ஓய்வூதிய உறுதி மசோதா 2023 என்ற புதிய ஓய்வூதிய முறையை அமல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆந்திர உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஓய்வு பெறும்போது ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
கிராமங்களில் 5ஜி நெட்வொர்க்கிற்கான கடன் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 10 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்தப்பட உள்ளது. மருத்துவத்துறையில் 14,653 ஒப்பந்த பணியாளர்கள் அரசு ஊழியர்களாக நியமனம் செய்யப்படும். சந்திரபாபுவின் ஹெரிடேஜ் பால் பண்ணைக்காக மூடப்பட்ட சித்தூர் கூட்டுறவு பால் பண்ணைக்கு சொந்தமான 28.35 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் 99 ஆண்டுகளுக்கு அமுல் பால் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்தார்.