பெரம்பலூர்,ஆக.26: பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட திமுக இளைஞர் அணியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10மணிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திலும் மாலை 3 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு அனைத்துத் துறைகளில் மேற் கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதன்பிறகு மாலையில் பெரம்பலூரில் நடைபெறும் பெரம்பலூர் , அரியலூர் மாவட்ட இளைஞர் அணியினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனையொட்டி பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கப்படவுள்ள இடத்தை நேற்று(25ம் தேதி) திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா.எம்.பி., பார்வையிட்டார். அப்போது பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.