விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது. இதற்காக 276 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2 வாரமாக வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிகட்ட பிரசாரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.
அன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் வெளியூர்களிலிருந்து வந்த அரசியல் கட்சியினர், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறினர். இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதனையொட்டி நேற்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மை உள்ளிட்ட பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று மாலை 6 மணிக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டது.
இந்த பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் பழனி பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் பழனி கூறியதாவது: ‘இடைத்தேர்தலில் 276 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 3 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை, 41 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 216 துணை ராணுவத்தினர் மற்றும் 2,800 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகங்களின் வெளிப்புறங்களில் 99 இடங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றின் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்படும். தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், 276 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு 1,355 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* 13ம் தேதி 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை
இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் ஸ்டிராங் ரூமில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படுகின்றன. துணை ராணுவம், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. தொடர்ந்து 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக எண்ணி முடிக்கப்படும். காலை 11 மணியளவில் வெற்றி நிலவரம் தெரிந்து விடும்.