கோவை, மே 25: கோவை மாவட்ட கேரம் சங்கம் 80 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து அதிகமான வீரர்கள் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளுக்கு சென்று பதக்கங்களை வென்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த சங்கம் சார்பாக 1998ம் ஆண்டு வரை கட்டணம் இல்லா கேரம் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. அதன்பின், சில காரணங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில், இச்சங்கம் 27 ஆண்டுகள் கழித்து கேரம் பயிற்சி முகாமை ‘சாம்பியன்களை தேடி’ என்ற பெயரில் நடத்துகிறது.
இம்முகாம் வரும் 29ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை கோவை மாநகராட்சி மேயர் ஆர்.ரங்கநாயகி துவக்கி வைக்கிறார். இதில், 10 முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் மொத்தம் 300 பேர் வரை கலந்து கொள்ளலாம். அமெரிக்காவை சேர்ந்த ‘சார்க் சர்வதேச கேரம் சாம்பியன்’ ஆர்.ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேரம் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை கற்றுத்தரவுள்ளார். இவருடன் சர்வதேச கேரம் வீரர் ராதா கிருஷ்ணன் மற்றும் சக்திவேல், தினகரன் ஆகியோர் பயிற்சியளிக்கவுள்ளனர்.