திருச்சி: சட்ட விதிகளை மீறும் வழக்குரைஞர்களுக்கு பார் கவுன்சில் ஒருபோதும் துணை நிற்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் தெரிவித்தார். திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் 46 வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் ஐகோர்ட் நீதிபதி நிர்மல்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சிவில், குற்றவியல், மாவட்டம், தாலுகா, பெண் வழக்குரைஞர்கள் சங்கம் என வழக்குரைஞர்களுக்கு பல்வேறு சங்கங்கள் இருக்கலாம். ஆனால் அந்தந்தத்துறை, பகுதிகளுக்காக பிரத்யேகமாக இந்த சங்கங்கள் உள்ளன. இருப்பினும் வக்கீல்கள் சமுதாயம் என்றால் அது ஒன்றுதான் என அனைத்து சங்கங்களுமே ஒற்றுமையுடன், ஒரே குரலில் ஒலித்தால் மட்டுமே உங்களது உரிமைகளை பெற முடியும். போலி வக்கீல்களை கண்டறிந்து அவர்களது பதிவை ரத்து செய்வதைப் போன்று, விதிகள் மீறும் வக்கீல்கள் மீதும் பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது சொத்துக்ககளை ஆக்கிரமித்தல், ரவுடியிசம், சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை போகக் கூடாது. 5 சதவீத வக்கீல்கள் தவறு செய்தால் 95 சதவீத வக்கீல்களுக்கும் அந்த அவப்பெயர் கிட்டும். எனவே, இளம் வக்கீல்களை வழிநடத்துவதிலும், தவறு செய்யும் வக்கீல்களை தண்டிப்பதிலும் பார் கவுன்சில் உறுதியாக இருக்க வேண்டும். ஐகோர்ட் நீதிபதியாக இருந்தாலும் முதலில் நானும் ஒரு வக்கீல். எனவே எப்போதும் வக்கீல்களுக்கான உரிமைக்கு துணை நிற்பேன். அதே நேரத்தில் விதிகளை மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. டிஜிட்டல் மயம், ஆன்லைன் நடவடிக்கைகளால் வக்கீல்களுக்கான வருங்காலம் பெரும் சவாலாக இருக்கும். எனவே வக்கீல்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் வக்கீல்களுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்கள் தான் வளர்த்துக் கொள்வதற்கான களம். எனவே இந்த கோர்ட்களில் வரும் ஒவ்வொரு மனுக்கள் மற்றும் வழக்குகளையும் கவனமாக கற்றுக் கொள்ள வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் அதன் உண்மை தன்மையை அறிந்து, அந்த உண்மையின் பக்கம் நின்று வாதிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஐகோர்ட் நீதிபதி முரளி சங்கர் பேசுகையில், போக்சோ வழக்குகளில் முத்தரப்பும் முறையாக செயல்பட வேண்டும். அரசு தரப்பு, எதிர்தரப்பு, கோர்ட் என முத்தரப்பும் கவனமாக இருந்தால் தவறு செய்யாத நபர்கள் தண்டிக்கப்படும் நிலை இருக்காது. ஏனெனில் இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்படும் நபர் சமூகத்திலிருந்தும், வீட்டிலிருந்தும், குடும்ப உறவுகளில் இருந்தும் ஒதுக்கப்படும் நிலை உருவாகும். வழக்குப்பதிவு செய்து பின்னர் குற்றமற்றவர் என விடுதலை ஆகும்போது மீண்டும் அவர் இழந்தவற்றை பெற முடியாது. குறிப்பாக இளம் வக்கீல்கள் மூத்தவர்களின் அனுபவங்களை நேரடியாக பெற்று பணிபுரிய வேண்டும். மருத்துவமும், சட்டமும் தினமும் கற்றுக் கொள்ள வேண்டிய தொழிலாக உள்ளது. வேறு எந்த தொழிலுக்கும் இல்லாத புனிதம் இந்த தொழில்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து, வக்கீல்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், திருச்சி மாவட்டத்துக்கான போர்ட்போலியோ நீதிபதியாக உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மதி, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், இணைத்தலைவர் மாரப்பன், நிர்வாகக் குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 60 ஆண்டுகளுக்கு மேலாக வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டு திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ள மூத்த வக்கீல் ஸ்டேனிஸ்லாஸ்க்கு ஐகோர்ட் நீதிபதிகள் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தனர். திருச்சி மாஜிஸ்திரேட் வக்கீல் சங்க சங்க தலைவர் முல்லை சுரேஷ் உட்பட மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், திருச்சி சிவில் கோர்ட் வக்கீல் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கம், நகர வக்கீல் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்