திருப்பூர்: போலி ஆதார் அட்டை பயன்படுத்தி பல்லடத்தில் தங்கியிருந்த வங்கதேச வாலிபர்கள் 26 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் வங்கதேச வாலிபர்கள் போலி ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டிகேடி மில் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் போலி ஆதார் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கதேச வாலிபர்கள் 26 பேர் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கதேசத்தை சேர்ந்த வாலிபர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போலி ஆதார் அட்டைகளை வழங்கும் ஏஜென்ட்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் சுமார் ஆறு மாதம் முதல் இரண்டு வருடங்கள் வரை அந்நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.