சென்னை: சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்திவரப்பட்ட விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 267 கிலோ தங்கம், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு, சுங்க சோதனையில்லாமல் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதற்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உறுதுணையாக செயல்பட்டதாகவும் சுங்க துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஜூன் மாத இறுதியில், அந்த பரிசுப்பொருள் கடை உரிமையாளர், அந்தக் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள், இலங்கையைச் சேர்ந்த ஒரு கடத்தல் பயணி ஆகிய 9 பேரை, சுங்க அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே 267 கிலோ தங்க கடத்தல் விவகாரம் மீண்டும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த கடத்தலில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ஆகியோருக்கு பங்கு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி டெல்லியில் உள்ள நிதி அமைச்சகத்தின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அது இம்மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சுங்க சோதனை பணியில் இருக்கும் சாதாரண சிப்பாய் முதல் உதவி ஆணையர்கள் வரை யாரும் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்தக் கூடாது. அவர்கள் பணிக்கு வந்ததும், செல்போனை அலுவலகத்தில் ஒப்படைத்து விட வேண்டும். அதன்பின்பு பணி நேரம் முடிந்து, வீடுகளுக்குச் செல்லும்போதுதான் செல்போனை எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கிடையே அந்த நேரத்தில், அவர்கள் செல்போன்களுக்கு அழைப்புகள் வந்தால், அவை சுங்கத்துறை துணை ஆணையர், இணை ஆணையர் மேற்பார்வையில் ஆய்வு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு பணிக்கு வந்துள்ள சுங்க ஊழியர்கள், அதிகாரிகள் பணி நேரத்துக்கிடையே, சுங்கச் சோதனை நடக்கும் இடத்தில் இருந்து, எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லக்கூடாது.
அலுவலக பணி நேரம் முடிந்த பின்புதான், உயர் அதிகாரிகள் அனுமதியுடன், அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நிதி அமைச்சகத்தின் விசாரணையில் இருக்கும் இந்த 267 கிலோ தங்க கடத்தல் விவகாரம் பற்றி, ஒன்றிய உள்துறை அமைச்சகமும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை ஒரு கிலோ தங்கம் கூட மீட்கப்படாததால், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், இது சம்பந்தமாக அடுத்த ஓரிரு தினங்களில் முறைப்படி தகவல் வெளியாகும் என்றும் ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.