அந்தியூர், மே 27: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பருவாச்சியில் செயல்படும் தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி பேருந்துகளில் ஆய்வு நடைபெற்றது.
அந்தியூர் பவானி தாலுகாவில் உள்ள 35 தனியார் பள்ளிகளின் 267 பள்ளி வாகனங்கள் நேற்று பருவாச்சியில் செயல்படும் தனியார் பள்ளி வளாகத்தில் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டது. கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம் தலைமையில் பவானி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பள்ளிக்கல்வித்துறைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு தணிக்கை செய்தனர்.
அப்போது, பள்ளி வாகனங்களில் அவசரகால வழி, கண்காணிப்பு கேமராக்கள், வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஆர்எஸ் கருவி, அதன் செயல்பாடுகள், முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பான் உள்ளிட்ட அரசு வகுத்துள்ள 16 வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது 10 வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிற்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கிய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், அவற்றை சரி செய்த பின்பு மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.