பாலக்கோடு, மே 25: தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாலக்கோட்டில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உத்தரவிட்டதின் பேரில், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, பாலக்கோடு அடுத்த மாதம்பட்டியில் உள்ள மூகாம்பிகை பாலிடெக்னிக் வளாகத்தில், பள்ளி வாகனங்களை தணிக்கை செய்தார்.
முன்னதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாபுசுந்தரம், டிரைவர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு சாலை விபத்தின்றி வாகனங்களை இயக்குவது குறித்தும், மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்து செல்வது குறித்தும் அறிவுரை வழங்கினார். இந்த வாகன தணிக்கையில் பாலக்கோடு, காரிமங்கலம் தாலுக்காவை சேர்ந்த 38 கல்வி நிறுவனங்களில் இயக்கப்பட்டு வரும் 304 வேன் மற்றும் பஸ்களில் 262 வாகனங்களை ஆய்வு செய்தனர்.
இதில் 12 வாகனங்களில் வேககட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, பிளாட்பாரம், ஏர்ஹாரன் உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு வர உத்தரவிடப்பட்டது. மேலும் தனிக்கைக்கு வராத 42வாகனங்கள், உரிய முறையில் பழுது பார்த்து வரும் ஜூன் 1ம் தேதிக்குள் ஆய்விற்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டனர்.
வாகன தணிக்கையில் தகுதி சான்று, காப்பீடு, பர்மிட், வரி உள்ளிட்டவை மற்றும் வாகனத்தின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தணிக்கைக்கு கொண்டு வராமல் சாலையில் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.