நாகர்கோவில், நவ.6 : சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டுக்கு வெளியே அனுமதியின்றி நடப்பட்டு இருந்த பா.ஜ. கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர். இதை கண்டித்து பாரதிய ஜனதாவினர் போராட்டமும் நடத்தினர். பாரதிய ஜனதா கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களில் 10 ஆயிரம் கொடி கம்பங்கள் நடப்படும் என்று பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ. வினர் கொடி கம்பம் நட்டு வருகிறார்கள். பொது இடங்களில் அனுமதியின்றி கொடி கம்பம் நடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர். குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களில் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கொடி ஏற்றப்படும் என்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் கூறியிருந்தார்.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட ஊட்டுவாழ்மடம் பகுதியில் உள்ள மாவட்ட பொருளாளர் முத்துராமன் வீட்டின் மாடியில் பா.ஜ. கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணைத்தலைவர் தேவ், நிர்வாகிகள் அஜித், ஐ.டி.பிரிவு சந்திரசேகர், அனுசுயா, ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதாவினர், கொடியேற்று நிகழ்ச்சி அறிவித்திருந்ததால், முக்கிய நிர்வாகிகள் வீடுகள் அமைந்துள்ள பகுதியில் போலீசார் கண்காணித்தனர்.