பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்புக்கு, கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் 25 ஆயிரம் பேர் வந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் டாப்சிலிப் அமைந்துள்ளது. இயற்கை அழகு மற்றும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்டு ரசிப்பதற்கு டாப்சிலிப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின்போது டாப்சிலிப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு வனப்பகுதியில் கோடைமழை அவ்வப்போது பெய்து வந்ததால் டாப்சிலிப்பில் குளிர்ந்த சீதோஷ்ணநிலை ஏற்பட்டுள்ளது. இதை அனுபவிக்க பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். டாப்சிலிப் வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலும், வனத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்ட வாகனத்தில் கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு சென்று வந்தனர். இந்த கோடை விடுமுறையில், கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் நேற்று (7ம் தேதி) வரை சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த ஒன்றரை மாதமாக, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். யானை சவாரி இல்லாமல் இருந்தாலும், டாப்சிலிப்பில் உள்ள தங்கும் விடுதியில் குடும்பத்துடன் தங்கி இயற்கை அழகை ரசித்து சென்றனர். இதன் மூலம், வனத்துறைக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்றனர்.