இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உட்பட 25 பிரபலங்கள், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ராணுவ ஆயுதங்கள் மற்றும் போர்த் தளவாடங்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு, இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி உரிமம் மற்றும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இஸ்ரேல் மீதான தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. எனவே இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களை சப்ளை செய்வது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாகும்.
எனவே இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை செய்யும் ஏற்றுமதிக்கான உரிமங்களை ரத்து செய்யவும், இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு புதிய உரிமம் வழங்குவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகின்றன. அவற்றில் முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (எம்ஐஎல்), பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் (பிஇஎல்) மற்றும் அதானி-எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை என்பது குறிப்பிடத்தக்கது.