புதுடெல்லி: மாநிலங்களவையில் 25 அரசு மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு மசோதா 31 ஆண்டாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. வழக்கமாக, மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்கள் மக்களவை கலைக்கப்படும் போது அவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களும் தானாகவே காலாவதியாகி விடும். ஆனால், மாநிலங்களவை என்பது கலைக்கப்படாமல் இயங்கும் மன்றம் என்பதால் இதில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்களை அரசு வாபஸ் பெறாதவரை அப்படியே நிலுவையில் இருக்கும்.
இதுகுறித்து மாநிலங்களவை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி வாடகை(திருத்தம்) மசோதா 1997 நிறைவேற்றப்படாமல் உள்ளது. டெல்லியில் வீடுகளுக்கான வாடகை ஒழுங்குப்படுத்துவது, வாடகை வீட்டை பழுது பார்த்தல், வாடகைதாரரை வெளியேற்றுவது குறித்த விஷயங்கள் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டுப்பாட்டாளரை நியமிப்பது குறித்த தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய திருத்த மசோதாவும் நிறைவேறவில்லை.
இதில் மிகவும் பழமையான மசோதாவான 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதை தடை விதிக்கும் அரசியல் சட்ட( 79வது திருத்த) மசோதா 1992 முதல் அதாவது 31 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாததால் தான் மசோதா நிறைவேற்றுவதில் தாமதமாகி வருகிறது என கடந்த 2005ம் ஆண்டு அரசு தெரிவித்தது.சுரங்க( திருத்த) மசோதா 2011, மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயர் தொழிலாளர்களின் வேலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பணி தொடர்பான நிபந்தனைகள் மசோதா 2011 உள்ளிட்ட 25 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.