*20 கிராமமக்கள் மகிழ்ச்சி
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே குளிப்பட்டியையொட்டி மருதாநதி ஆற்றில் மேம்பாலம் கட்ட வேண்டுமென்று 20 கிராம மக்கள் 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று தமிழக அரசு ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கி மேம்பாலம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. இதனால் 20 கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வத்தலக்குண்டு அருகே குளிப்பட்டியையொட்டி மருதாநதி ஆறு ஓடுகிறது. தாண்டிக்குடி மலைப்பகுதியிலிருந்து வரும் தண்ணீர் அய்யம்பாளையம் அருகே மருதாநதி அணையில் தேக்கப்படுகிறது. 72 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையின் உபரிநீர் மருதாநதியாக அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, வெங்கிடாஸ்திரி கோட்டை வழியாக வந்து குளிப்பட்டியை கடந்து கூட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகையாறு, மஞ்சளாறு ஆகியவற்றோடு ஒன்றாக கலக்கிறது. மலைப்பகுதியில் ஊற்று கோடைகாலத்தில் மட்டுமே வற்றுவதாலும் மற்ற நாட்களில் ஊற்றில் எப்போதும் தண்ணீர் வருவதாலும் மருதாநதி ஆற்றில் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் சென்றுகொண்டே இருப்பது வழக்கம்.
மருதாநதி ஆற்றில் தண்ணீர் செல்லும் போது குளிப்பட்டி, கோம்பைபட்டி, குறும்பபட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மீனாட்சிபுரம் கே.உச்சபட்டி சமத்துவபுரம், சின்னுபட்டி, கரட்டுப்பட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வெங்கிடாஸ்திரி கோட்டை, எம்.குரும்பபட்டி வழியாக 10 கிமீ சுற்றிசெல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. அதேபோல அப்பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வருபவர்களும் 10 கிமீ தூரம் சுற்றி சென்று அவதி அடைந்து வந்தனர்.
அதேபோல விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல அதிக அளவில் செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது.இதனால் அப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குளிப்பட்டி அருகே மருதாநதி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு போராட்டங்களும் நடத்தினர். 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மக்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை.
அதன் பிறகு அப்பகுதி மக்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் மற்றும் அதிகாரிகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பலனாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.ஒரு கோடி நிதியில் மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடந்து தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. ஆற்றில் தண்ணீர் வந்த போதும் இடைவிடாமல் மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்ததால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிந்து இருக்கிறது.
புதிய மேம்பாலத்தை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், துணைத் தலைவர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், முனியாண்டி, உதவி பொறியாளர் டெல்லி ராஜா, மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேம்பாலம் திறக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் தங்கப்பாண்டி கூறுகையில், கடந்த நூற்றாண்டில் விடுத்த கோரிக்கை இப்போது நிறைவேறி இருக்கிறது. மேம்பாலத்தில் விரைவில் செல்லப்போவதை நினைக்கும்போது இப்போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் விவசாயம் பெருகும். தொழில்கள் மேலும் சிறப்படையும். தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.