திருவண்ணாமலை, மே 12: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடந்தது. விடிய விடிய சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, அதிகாலை தொடங்கி இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக திரண்டதால், மாடவீதி வரை தரிசன வரிசை நீண்டது. சுட்டெரித்த கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும், தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், மோர், கடலை மிட்டாய், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன. தரிசன வரிசை அமைந்த இடங்களில் தற்காலிக நிழற்பந்தல் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 8.47 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 10.43 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன்தொடர்ச்சியாக, நேற்று மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. இரவு முழுவதும் விடிய விடிய சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பக்தர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து நாளை வரை 4,533 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதையொட்டி, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த 85 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. நகருக்குள் கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை 165 கட்டணமில்லா இலவச இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழுப்புரம், காட்பாடி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. அதோடு வழக்கமான ரயில்களும் இயங்கின. கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்களால் பஸ்களிலும், ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 750க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.