திருவாரூர், நவ. 7: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 243 மனுக்களை கலெக்டர் சாரு பெற்றுக்கொண்டார்.திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சாரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய ரேஷன் கார்டு, கல்வி கடன், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 243 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணாதுரை, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை கலெக்டர் சாரு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ சண்முகநாதன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதா, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.