தஞ்சாவூர், நவ.11: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிண ங்க 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றா ண்டு மண்டபத்தில் நேற்று கரந்தை, கோட்டை, மருத்துவ கல்லூரி பகுதிகள் பொது உறுப்பினர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, முரசொலி எம்.பி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளரும், மேயருமான சண். ராமநாதன் வரவேற்றார். இதில் தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தஞ்சை சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை வகித்து பேசியதாவது:-
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. ஏழை, சாமானிய மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். இன்று கூட விருதுநகர் மாவட்டத்தில் களப்பணியில் ஈடுபடும்போது கடை வீதிகளில் நடந்து சென்று தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். ஆனால் அதையும் தாண்டி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதற்காக நாம் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணி என்று வந்து விட்டால் நம்மை மிஞ்ச யாரும் கிடையாது. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தீர்மானம் நிறைவேற்றி அதற்காக உழைக்க வேண்டும் . தஞ்சை சட்டமன்ற தொகுதியில் நம்மை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை சட்டமன்ற தொகுதி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்ற நிலையை அடைய அனைவரும் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும். வரும் 27ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஏழை எளியோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் இறைவன், மாநில மருத்துவ அணி துணை செயலாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண் ணா, பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், நீலகண்டன், கார்த்திகேயன், மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகில்வேந்தன், துணை அமைப்பாளர் செந்தமிழ் செல்வன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் வாசிம் ராஜா, மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா, கவுன்சிலர்கள் உஷா, தமிழ்வாணன், அண்ணா பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் தஞ்சை கிழக்கு ஒன்றியம் வல்லம் பேரூர் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.