செய்யாறு, மே 25: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு திடலில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் 37 தனியார் பள்ளிகளை சேர்ந்த 232 பள்ளி வாகனங்களின் தகுதி ஆய்வு நேற்று நடைபெற்றது. செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா கலந்து கொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு பணியை தொடங்கி வைத்து வேன், பஸ் உள்ளே சென்று பார்த்து அவசர வழி எளிதில் திறக்க முடியாத நிலையில் உள்ளதை சரி செய்து பிறகு தகுதி சான்று வழங்க வேண்டும் என வட்டார போக்குவரத்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். பள்ளி வாகனத்தை பாதுகாப்பாக விபத்தின்றி இயக்க வேண்டும். தனியார் பள்ளி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தி விபத்தைத் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்றனர். மேலும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தீயணைப்புத் துறையினர் தீ விபத்து நேரத்தில் பேருந்தில் உள்ள தீயணைப்பு உபகரணம் கொண்டு எவ்வாறு தீயை அணைக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கங்களையும் வழங்கினர். நிகழ்ச்சியில் செய்யாறு தீயணைப்பு அலுவலர் மனோகர், செய்யாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.