ஈரோடு: கொல்கத்தா பெண் டாக்டர் கொலையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 400 மருத்துவமனைகளில் பணியாற்றும் 2200 டாக்டர்கள் 24 மணி நேர ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பெண் டாக்டர்கள் கொலையை கண்டித்து, தேசிய அளவில் டாக்டர்கள் நேற்று 17ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி இன்று காலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 400 தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 2200 டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 24 மணி நேரம் நடைபெற்ற இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் அவசர சிகிச்சை தவிர புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. இப்போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் அபுல்ஹசன் கூறியதாவது: கொல்கத்தா பெண் டாக்டர் கொலையானது டாக்டர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பணியாற்றி வருகிறார்கள் என்பதை உணர முடிகின்றது.
இக்கொலை சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரியும் இந்திய மருத்துவ சங்கம் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சம் டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 7 ஆயிரம் மருத்துவமனைகளில் பணியாற்றும் 42 ஆயிரம் டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 400 மருத்துவமனைகளில் பணியாற்றும் 2200 டாக்டர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தினால் புறநோயாளிகள் பார்வை அனுமதி இல்லை. மிக அவசர தேவைகளில் இருக்கும் நோயாளிகளை மட்டும், தொடர்புடைய மருத்துவமனை டாக்டர்கள் அவசர சிகிச்சை அளித்து வருகின்றனர். உள் நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடவில்லை. ஆனால் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் போராட்டம் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் நேற்று காலை ஒரு மணி நேரம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பின்னர் நுழைவு வாயில் முன்பாக கருப்பு பட்டை அணிந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல ஈரோடு ஐஎம்ஏ முன்பாக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் அரவிந்தகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.