புதுச்சேரி, ஜூலை 2: புதுச்சேரியில் வருகிற 9ம்தேதி 21 அம்ச கோரிக்ைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்துடன் பந்த் போராட்டமும், 8 இடங்களில் சாலை மறியலும் நடைபெறும். பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டிலுள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்புகள் கடந்த மார்ச் 13ம்தேதி டெல்லியில் கூடி தொழிலாளர்களின் தேசிய பேரவை கூட்டத்தை கூட்டின. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்ட திருத்தங்கள் ஒன்றிய அரசு மேற்கொள்வதால் ஜூலை 9ம்தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளது.
அதன்படி புதுச்சேரியிலும் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பபெற வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9ம்தேதி வேலை நிறுத்தத்துடன் பந்த் போராட்டம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய பேருந்து நிலையம், அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, காரைக்கால் ஆகிய 8 இடங்களிலும் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்று மறியல் போராட்டம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பந்த் போராட்டத்துக்கு பேருந்து, ஆட்டோ, டெம்போ மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் 9ம்தேதி பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்காது. பந்த் போராட்டம் காரணமாக பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்பதால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் ஞானசேகரன், எல்பிஎப் அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், ஏஐசிசிடியு பொதுச்செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.