அவிநாசி, ஜூன் 3: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவிநாசி தாலுகா தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல், சீருடை, நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரண பொருட்களை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழ்நாடு அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதால் தான் இன்றைக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக நம்முடைய அரசு பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்கள் தேர்ச்சி பெறுகின்றனர். உயர்கல்வியிலும் நம்முடைய மாநிலம் சிறப்புக்குரிய இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு நம்முடைய திருப்பூர் மாவட்டம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடத்தை பெற்றது. இந்த ஆண்டு 3வது இடத்தை நாம் பிடித்திருக்கிறோம். இருந்த போதிலும் கடந்த ஆண்டை காட்டிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 21வது இடத்திலிருந்து 17வது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளியில் பயிலும், மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேல் படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2,04,633 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நலத்திட்ட பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, திருப்பூர் மாநகர திமுக பொறுப்பாளர் தங்கராஜ், திருமுருகன்பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் நடராசன், கணபதிசாமி, மாவட்ட திமுக தொழிலாளரணி அமைப்பாளர் அவிநாசியப்பன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வரதராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கந்தசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகம் என பலர் கலந்து கொண்டனர்.