புதுடெல்லி: வருகிற 2027ம் ஆண்டுக்குள் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ரயில்வே வாரியம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் முக்கிய பண்டிகைகளின் போது பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் பெறுவது மிகவும் கடினமாகி விடுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு எப்போதுமே டிக்கெட் கிடைப்பது இல்லை. இந்த தீபாவளி நேரத்திலும் இதே நிலை தான் நீடித்தது. இதே போல் சாத் பண்டிகையை கொண்டாட நாடு முழுவதும் உள்ள பீகார் மாநில மக்கள் அங்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயிலில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
தீபாவளி நெரிசல் முடிந்த பிறகு இப்போது சாத் பண்டிகை நெரிசல் அதிகரித்துள்ளது. பீகார் செல்லும் ரயிலில் ஏற முயன்ற 40 வயது நபர் நெரிசல் காரணமாக உயிரிழந்தார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாடு முழுவதும் 2027ம் ஆண்டுக்குள் முன்பதிவு செய்த அனைவருக்கும் கன்பார்ம் டிக்கெட் வழங்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரமாண்ட திட்டங்களை ரயில்வே முன்னெடுத்து வருகிறது. மேலும் பயணிகள் நலனுக்காக புதிய ரயில்களை அறிமுகம் செய்யவும், அதிவிரைவு ரயில்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 4,000 முதல் 5,000 கிலோமீட்டர் வரை புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது தினமும் 10,748 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதை தினமும் 13,000 ரயில்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 3,000 புதிய ரயில்கள் தண்டவாளத்தில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இனிமேல் பயணிகளின் திறனை 1,000 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு முக்கியமாக பயண நேரத்தைக் குறைப்பதற்கும் ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக அதிக தண்டவாளங்கள் அமைப்பது, வேகத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு பயண வேகத்தை அதிகரித்தால் 2 மணி நேரம் 20 நிமிடங்களைச் சேமிக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே போல் தற்போது ஆண்டுதோறும் சுமார் 225 ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் புஷ் புல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரயில் இயக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
* 3 மடங்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,’ கடந்த ஆண்டை விட இந்த பண்டிகைக் காலத்தில் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2,614 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 6,754 கூடுதல் ரயில் பயணங்களை ரயில்வே இயக்குகிறது’ என்றார்.
* அடுத்த 5 ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள்
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,’ அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் 3,000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ரயில்வே பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 250 புதிய ரயில்களை ரயில்வே சேர்க்க முடியும். அதோடு 400 முதல் 450 வந்தே பாரத் ரயில்களும் இதில் இணைக்கப்படும்’ என்று கூறினார்.
* படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பா?
ரயில்களில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதுபற்றி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,’ஏசி அல்லாத பெட்டிகளைத் தேர்வு செய்யும் பயணிகளுக்கு படுக்கை வசதி தட்டுப்பாடு என்ற செய்திகள் தவறு. புதிய எல்ஹெச்பி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே ஒரு ரயிலில் பெட்டிகளின் இணைப்பில் நிலையான கலவை உள்ளது ’என்றார்.