தியாகதுருகம்: ‘2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பொய் கனவு காண்கிறார்’ என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட கட்டுமான பணிகளின் திட்ட வரைபடம், பணி நடைபெறும் இடம், கட்டுமான பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஒவ்வொரு தளங்களாக நேரில் சென்று பார்வையிட்டு அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என பொய் கனவு கண்டு வருகிறார். மதுரையில் பாஜவினர் கூடினால் திமுகவினருக்கு அச்சம் வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
இது முழுக்க முழுக்க திராவிட மாடல் மண், திராவிட மண், பெரியார் மண், பேரறிஞர் அண்ணாவால் பக்குவப்படுத்தப்பட்ட மண், கலைஞரால் தமிழ் உணர்வை ஊட்டி வளர்ந்த மண், அந்த 3 பேரின் மொத்த உருவம் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர். முதல்வரின் எண்ணங்கள் அத்தனையும் மக்களை நோக்கி போகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் பொது பிரச்னைகளை தீர்த்து வைக்கவும், பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு அவர் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.